உ.பி: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! சிறுமியின் மாமா உட்பட 3 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் மாமா உட்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
பிஜ்னோர்,
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை அவரது மாமா உட்பட மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தாம்பூர் காவல் நிலையப் பகுதியில் புதன்கிழமை நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரில், சிறுமிக்கு மாமா உறவுமுறையான அமர்ஜித் என்பவர், பள்ளிக்கு சென்ற சிறுமியை வற்புறுத்தி அழைத்துச்சென்றதாக தெரிவித்துள்ளார். பின்னர் அமர்ஜித் மற்றும் அவரது நண்பர்கள் மோகித் தியாகி மற்றும் சுமித் வர்மா ஆகியோர் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.