9 மாதங்களில் இந்தியாவுக்குள் 191 பாகிஸ்தான் டிரோன்கள் ஊடுருவல் - மத்திய அரசு தகவல்
9 மாதங்களில் 191 பாகிஸ்தான் டிரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் ஆளில்லா விமானங்களின் (டிரோன்கள்) எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால், உள்நாட்டு பாதுகாப்புகள் அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து கடந்த 9 மாதங்களில் மட்டும் 191 டிரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்திருப்பதாகவும், அதில் 7 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இது உள்நாட்டு பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக பாதுகாப்புப் படையினர் அளித்த தரவுகளை மத்திய அரசு பகிர்ந்துகொண்டுள்ளது. அதன்படி, இதுவரை 191 டிரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளன என்றும் அதில் 171 டிரோன்கள் பஞ்சாப் செக்டார் பகுதி வழியாகவும், 20 டிரோன்கள் ஜம்மு செக்டார் பகுதி வழியாகவும் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 191 டிரோன்களில், 7 டிரோன்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. இந்த டிரோன்கள் மூலம், ஆயுதங்கள், வெடிபொருள்கள், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களை பாகிஸ்தானிலிருக்கும் பயங்கரவாத குழுக்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளுக்கு அனுப்பி வைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.