உ.பி.: நுபுர் சர்மாவுக்கு எதிராக சமூக வலைதளத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பதிவு - இருவர் கைது!
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சிலர் ஊர்வலம் நடத்தியதை தொடர்ந்து, சமூக வலைதளத்தில் சாதி சார்ந்த பதிவுகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் சமூக வலைதள பதிவு மூலம் மத உணர்வுகளைத் தூண்டியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, நேற்று மாலை, கோபிகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மீறி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சிலர் ஊர்வலம் நடத்தினர். இந்த விவகாரத்தில் 144 சட்டப்பிரிவை மீறியதாக 46 பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், சூர்யாவா காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் சவுத்ரி அசார் என்பவர், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சிலர் ஊர்வலம் நடத்தியதை தொடர்ந்து, நுபுர் சர்மாவுக்கு எதிராக பேஸ்புக்கில் சில "சாதி சார்ந்த" பதிவுகளை வெளியிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அதேபோல, கோட்வாலி பகுதியைச் சேர்ந்த இரண்டாவது குற்றவாளியான துர்கேஷ் சிங்கும், அதே தளத்தில் "ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்" ஒரு பதிவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, படோஹி மாவட்டத்தில் uள்ள அவர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சமூக வலைதளங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பொது மக்களை அமைதி காக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்தனர், இல்லையெனில் "கடுமையான சட்ட நடவடிக்கை" எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.