சத்தீஷ்காரில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன


சத்தீஷ்காரில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன
x

சத்தீஷ்காரில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகி உள்ளன.



தோங்கர்கார்,



மராட்டியத்தின் நாக்பூர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சத்தீஷ்காரின் தோங்கர்கார் பகுதியில் திடீரென தடம் புரண்டது. 18239 என்ற எண் கொண்ட ஷிவ்நாத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆனது, கோண்டியா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இத்வாரி ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இதில், ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. எனினும், இதனால் ஒருவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தென்கிழக்கு மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.

ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, ரெயிலை மீண்டும் இயக்குவதற்கான பணிக்காக தொழில் நுட்ப குழு ஒன்று சென்றது. மருத்துவ குழு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. 2 மணிநேர பணிக்கு பின்பு, தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் தனியாக கொண்டு செல்லப்பட்டன.

அதில் இருந்த பயணிகள் படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு இடம் மாற்றப்பட்டனர். அதன்பின் ரெயில் புறப்பட்டு சென்றது. இதேபோன்று, ஒடிசாவின் புவனேஸ்வர் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலின் 5 பெட்டிகள் நேற்றிரவு தடம் புரண்டன. இதனால், அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

கடந்த வாரம், சத்தீஷ்காரில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சென்ற பகத் கி கோட்டி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயிலின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் லேசான காயம் அடைந்தனர்.


Next Story