பெங்களூருவில் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு 2 நாளில் நிவாரணம்-மந்திரி அஸ்வத்நாராயண உத்தரவு


பெங்களூருவில் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு 2 நாளில் நிவாரணம்-மந்திரி அஸ்வத்நாராயண உத்தரவு
x

பெங்களூருவில் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு 2 நாளில் நிவாரணம் வழங்கப்படும் என்று மந்திரி அஸ்வத்நாராயணா உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

பெங்களூரு:

பெங்களூருவில் கடந்த 17-ந் தேதி கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தியது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழை வெள்ளம் புகுந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார். அவர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்வதற்கு முன்பு, 7 மந்திரிகள் தலைமையில் மண்டல குழுக்களை அமைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கலால்துறை மந்திரி கோபாலய்யா தலைமையில் பொம்மனஹள்ளி மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதே போல் கிழக்கு மண்டல குழு தலைவரான மந்திரி அஸ்வத் நாராயண், தாவோஸ் நகரில் இருந்தபடி காணொலி மூலம் கிழக்கு மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அஸ்வத் நாராயண், "பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் மழையால் 691 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணத்தை அடுத்த 2 நாட்களுக்குள் வழங்க வேண்டும். பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக நிவாரணத்தை வரவு வைக்க வேண்டும்.

கால்வாய்களை தூர்வார ஒப்பந்ததாரருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் நடக்கவில்லை. அதனால் அந்த ஒப்பந்ததாரருக்கு நோட்டீசு அனுப்ப வேண்டும். 20 நாட்களுக்குள் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

1 More update

Next Story