ஒடிசா ரெயில் விபத்து: மத்திய, மாநில அரசு நிவாரணம் அறிவிப்பு


ஒடிசா ரெயில் விபத்து: மத்திய, மாநில அரசு நிவாரணம் அறிவிப்பு
x

கோரே ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசா அருகே ஜாஜ்பூர் அருகே கோரே ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். சரக்கு ரெயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இரு ரெயில் பாதைகளும் தடைபட்டுள்ளது. சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துள்ளானதில் ரெயில் நிலைய கட்டிடமும் சேதமடைந்தது. மீட்பு குழுவினர், ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

டோங்கோபோசியில் இருந்து சத்ரபூருக்குச் செல்லும் வெற்று சரக்கு ரயிலின் ஓட்டுநர், திடீரென பிரேக் அடித்ததால், ரயிலிலிருந்து 8 பெட்டிகள் தடம் புரண்டு, பிளிட்பாரமில் இருந்த பயணிகள் மீது விழுந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், கோரே ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ 2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் அறிவித்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மந்திரி ரமில்லா மல்லி சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்யுமாறு முதல்-மந்திரி கேட்டுக் கொண்டார்.

இந்த விபத்து காரணமாக இரு வழித்தடங்களும் தடைப்பட்டதால், ஹவுரா-சென்னை வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் 12 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.


Next Story