நிலச்சரிவு காரணமாக சீக்கியர் கோவிலில் நெரிசல்; 2 பக்தர்கள் உயிரிழப்பு


நிலச்சரிவு காரணமாக சீக்கியர் கோவிலில் நெரிசல்; 2 பக்தர்கள் உயிரிழப்பு
x

சீக்கியர் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

உனா,

இமாசல பிரதேசத்தின் உனா மாவட்டத்துக்கு உட்பட்ட மைரி கிராமத்தில் புகழ்பெற்ற சீக்கிய வழிபாட்டுத்தலம் ஒன்று உள்ளது. இங்கு பஞ்சாப், அரியானா, டெல்லி, இமாசல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.அந்தவகையில் பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் இந்த சீக்கியர் கோவிலில் குவிந்திருந்தனர். அவர்கள் நேற்று அதிகாலையில் அங்குள்ள சரண் கங்கா நதியில் புனித நீராடினர்.

அப்போது சுமார் 5 மணியளவில் அருகில் உள்ள மலையில் இருந்து பெரிய பாறைகள் உருண்டு கீழே வந்தன.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இதனால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பலர் ஏறி மிதித்துக்கொண்டு ஓடினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பும், கூச்சல், குழப்பமும் ஏற்பட்டது.

இந்த பயங்கர சம்பவத்தில் 9 பக்தர்கள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்ப் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் பஞ்சாப்பின் பரித்கோட்டை சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்தவர்களில் 5 பேர் உனா மண்டல ஆஸ்பத்திரிக்கும், 2 பேர் சண்டிகார் ஆஸ்பத்திரிக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சீக்கியர் கோவிலில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சீக்கியர் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் இமாசல பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story