விபத்தை ஏற்படுத்தியதாக கூறி தொழில்அதிபரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

விபத்தை ஏற்படுத்தியதாக கூறி தொழில்அதிபரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சித்தாபுரா:
பெங்களூரு பொம்மனஹள்ளியை சேர்ந்தவர் பிமல்குமார் (வயது 65). தொழில் அதிபரான இவர், ஆயத்த ஆடை தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த வாரம் லால்பாக் அருகே ஓசூர் மெயின் ரோட்டில் அவர் தனது காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், பிமல்குமாரின் காரை வழிமறித்தார்கள்.
தன்னுடைய நண்பரின் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்வதாக கூறி, பிமல்குமாரிடம் 2 பேரும் தகராறு செய்தார்கள். பின்னர் அவர்கள் பணம் கேட்டு பிமல்குமாரை மிரட்டி உள்ளனர். இதையடுத்து, தன்னிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை அந்த நபரிடம் கொடுத்தார். இதுகுறித்து பிமல்குமார் கொடுத்த புகாரின் பேரில் சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், பிமல்குமாரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் மைசூருவை சேர்ந்த ஜமீல்கான் (வயது 30) மற்றும் 18 வயது நிரம்பாத பீகாரை சேர்ந்த சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பணம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் மீதும் சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.