துர்கா சிலையை கரைக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு


துர்கா சிலையை கரைக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 6 Oct 2022 6:45 PM GMT (Updated: 6 Oct 2022 6:45 PM GMT)

பெங்களூருவில் துர்கா சிலையை கரைக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

பெங்களூரு:

மராட்டியத்தை சேர்ந்தவர் ராம் ரத்தன். இவர் பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் துர்கா பூஜையையொட்டி ராம் ரத்தன் தனது வீட்டில் காளி சிலையை வைத்து வழிபட்டார். நேற்று முன்தினம் அந்த காளி சிலையை கரைக்க தனது உறவினர்கள் சிலருடன் ராம் ரத்தன், உத்தரஹள்ளி மெயின் ரோட்டில் உள்ள சுங்கலபாளையா ஏரிக்கு சென்றார்.

ஏரியில் சிலையை கரைத்து கொண்டு இருந்தபோது ராம் ரத்தனின் உறவினர்களான சோமேஷ்(வயது 21), ஜித்து(22) ஆகிய 2 பேரும் எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்ததும் ஆர்.ஆர்.நகர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சென்று அவர்களது உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடல்கள் கிடைக்கவில்லை. நேற்று 2-வது நாளாக உடல்களை தேடும் பணி நடந்தது. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து ஆர்.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story