பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர முடிவு?


பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர முடிவு?
x

கர்நாடகத்தில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:-

20 எம்.எல்.ஏ.க்கள் முடிவு?

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், துணை முதல்-மந்திரியாக உள்ளார். அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. இதற்காக காங்கிரசை பலப்படுத்தவும், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்கவும் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த கூட்டணி ஆட்சியில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா சென்று தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, எம்.டி.பி.நாகராஜ், சிவராம் ஹெப்பார், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து எம்.எல்.ஏ. ஆகி உள்ள கோபாலய்யா உள்ளிட்ட 20 எம்.எல்.ஏ.க்களை மீண்டும் காங்கிரசில் சேர்க்க டி.கே.சிவக்குமார் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கட்சிகளை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சித்தராமையா எதிர்ப்பு

ஆனால் காங்கிரசில் இருந்து விலகிய சிலரை மீண்டும் கட்சியில் சேர்க்க முதல்-மந்திரி சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சில மூத்த காங்கிரஸ் தலைவர்களும், கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் சேர்க்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெறவும், பெங்களூரு உள்ளிட்ட தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிறுத்தவும் அவர்களை காங்கிரசுக்கு இழுக்க டி.கே.சிவக்குமார் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பசவராஜ் பொம்மை சமாதானம்

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவி வருவதை தொடர்ந்து, எஸ்.டி.சோமசேகர், சிவராம் ஹெப்பார், பைரதி பசவராஜ், கோபாலய்யா உள்ளிட்டோரை முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நளின்குமார் கட்டீல் தொடர்பு கொண்டு பேசி சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் திடீரென்று ஆலோசனையும் நடத்தினார்கள். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story