உ.பி.யில் பசு வதையில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு மற்றும் குண்டர் சட்டம் பாயும்


உ.பி.யில் பசு வதையில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு மற்றும் குண்டர் சட்டம் பாயும்
x
தினத்தந்தி 6 Jun 2017 7:53 AM GMT (Updated: 6 Jun 2017 7:53 AM GMT)

உத்தரபிரதேசத்தில் பசு வதையில் ஈடுபடுவோர் மீது தேசிய பதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


லக்னோ, 


உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்ற பின்னர் இறைச்சி கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்விவகாரம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் கால்நடை சந்தைகளில், இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ், இந்நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த தடை, குறிப்பிட்ட தரப்பினரின் உணவு பழக்கத்தில் குறுக்கிடும் செயல் என்றும், இந்த தடையால் தோல் பொருள் வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

இதுதொடர்பான ஒரு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, மத்திய அரசின் அறிவிக்கைக்கு 4 வார இடைக்கால தடை விதித்துள்ளது. இதனையடுத்து இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிரான யோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. 

இருப்பினும் இவ்விவகாரத்தில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து புதிய அறிவிப்புக்கள் வந்த வண்ணம் உள்ளது.

இப்பிரச்சனையை மேலும் வலுப்படுத்தும் விதமாக உத்தரபிரதேச மாநில போலீஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 

மாநிலத்தில் பசு வதையில் ஈடுபட்டாலோ, அதிகமான விலங்குகளை இறைச்சிக்காக ஏற்றிச் சென்றாலோ தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என அம்மாநில போலீஸ் அறிவித்து உள்ளது.


Next Story