ம.பி.யில் விவசாயிகள் போராட்டம் பரவல், மத்திய அரசு 5 பட்டாலியன் பிரிவுகளை அனுப்பியது


ம.பி.யில் விவசாயிகள் போராட்டம் பரவல், மத்திய அரசு 5 பட்டாலியன் பிரிவுகளை அனுப்பியது
x
தினத்தந்தி 8 Jun 2017 4:06 AM GMT (Updated: 8 Jun 2017 4:07 AM GMT)

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவர்களுடைய போராட்டம் வேகமாக பரவிவருகிறது.



போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1–ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாலைகளில் பாலை ஊற்றியும், காய்கறிகளை கொட்டியும் அவர்கள் நூதன முறையில் போராடி வருகிறார்கள். இதனையடுத்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். மண்ட்சவுர் மாவட்டம் பிபல்யா மண்டி பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை மீறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர். பின்னர் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து பதற்றமான பகுதிகளில் மாநில அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. 

விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பிற மாநில விவசாயிகளும் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் பிற மாவட்டங்களிலும் போராட்டம் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் மத்திய அரசு, மாநில போலீசுக்கு உதவி செய்யும் வகையில் 5 பட்டாலியன் படை பிரிவுகளை அனுப்பிஉள்ளது.

நேற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மாநிலத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளன. காங்கிரஸ் ஆதரவு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளது. நேற்று போபால் - இந்தூர் நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீவைத்து உள்ளனர். திவாஸ் பகுதியில் நீண்ட நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பயணிகள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வயல் பகுதிகளில் ஓடிய காட்சிகளும் வெளியாகி உள்ளது.

மண்ட்சவுரில் அமைதியை நிலைநாட்ட உள்ளூர் போலீசுக்கு உதவி செய்யும் வகையில் 1,100 வன்முறை தடுப்பு பிரிவு போலீசையும் மத்திய அரசு அனுப்பி உள்ளது. சிறப்பு படைகளும் அங்கு அனுப்பட்டு உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்து உள்ளன.

இதற்கிடையே காங்கிரஸ்தான் போராட்டத்தை தூண்டி வருகிறது என பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

தூண்டியவர்கள் மீது நடவடிக்கை

இதற்கிடையே வன்முறையை தூண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க சிவராஜ் சிங் சவுகானிடம் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டு உள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச அரசிடம் அறிக்கை கோரிஉள்ள மத்திய அரசு சமூக வலைதளங்களை கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளது. மண்ட்சவுரில் அமைதியின்மையை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டு உள்ளார். ஆங்கில பத்திரிக்கைக்கு ராஜ்நாத் சிங் அளித்து உள்ள பேட்டியில், “மத்திய பிரதேச முதல்-மந்திரியிடம் பேசிஉள்ளேன், அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்து உள்ளேன். பிரச்சனை நிலவும் பகுதிகளுக்கு மத்திய பாதுகாப்பு படைகள் அனுப்பட்டு உள்ளது,” என கூறிஉள்ளார். 
 
பிரதமர் மோடிக்கு சவால்

விவசாய கடன் தள்ளுபடி என்ற கோரிக்கையை முன்வைத்து பா.ஜனதா ஆட்சி செய்யும் மராட்டிய மாநிலத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக பொது மக்கள் அத்யாவசிய பொருட்கள் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, விவசாயிகள் பிரச்சனையில் பா.ஜனதாவை கடுமையாக வசைபாடி வருகிறது. 

உ.பி.யை போன்று மராட்டியத்திலும் விவசாய கடன் தள்ளுபடி வேண்டும் என அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ள நிலையில் சிவசேனா அதனை புறக்கணித்து உள்ளது.

இதேபோன்று பா.ஜனதா ஆட்சி செய்யும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானிலும் இதே கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் அடுத்த வாரம் போராட்டத்தை தொடங்க உள்ளனர். பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கி உள்ளது பிரதமர் மோடிக்கு பெரும் சவாலாக எழுந்து உள்ளது.

Next Story