ரெயிலில் மாற்று திறனாளி வீராங்கனைக்கு மேல் படுக்கை ஒதுக்கீடு, தரையில் தூங்கிய அவலம்


ரெயிலில் மாற்று திறனாளி வீராங்கனைக்கு மேல் படுக்கை ஒதுக்கீடு, தரையில் தூங்கிய அவலம்
x
தினத்தந்தி 11 Jun 2017 7:34 AM GMT (Updated: 11 Jun 2017 7:34 AM GMT)

ரெயிலில் மாற்று திறனாளி வீராங்கனைக்கு மேல் படுக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அவர் வழியின்றி தரையில் தூங்கிய அவலம் நேரிட்டு உள்ளது.


புதுடெல்லி,


போலியோ காரணமாக 90 சதவிதம் பாதிப்பட்ட மாற்று திறனாளி வீராங்கனை சுவர்ணா ராஜ், மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கங்கள் வாங்கி உள்ளார். நேற்று இரவு 8:45 மணியளவில் நாக்பூர் - புதுடெல்லி காரிப் ராத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிஉள்ளார். ரெயிலில் மாற்று திறனாளிகளுக்கான பெட்டியில் அவருக்கு மேல் படுக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தன்னால் மேல் படுக்கைக்கு செல்ல முடியாது எனவும் மாற்று ஏற்பாடு செய்து தறுமாறும் டிடிஇயிடம் சுவர்ணா ராஜ் கோரிக்கை விடுத்து உள்ளார். 

கீழ் படுக்கை வசதி செய்து கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து உள்ளார். ஆனால் அவருடைய கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. யாருடைய உதவியும் கிடைக்காத நிலையில் அவர் தரையில் படுத்து ரெயிலில் பயணம் செய்து உள்ளார். இரவே இதுதொடர்பாக ரெயில்வே அமைச்சகத்திற்கும் அவர் டுவிட்டரில் தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் மீடியாவிற்கும் நிலை குறித்து விளக்கி உள்ளார். 

சுவர்ணா ராஜ் பேசுகையில், “சுமார் 10 முறையாவது டிடிஇக்கு அழைப்பு விடுத்தேன், ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை. டிக்கெட்டை பரிசோதனை செய்ய கூட யாரும் வரவில்லை, என்னால் கழிவறை கூட செல்ல முடியவில்லை,” என கூறிஉள்ளார். 

இன்று காலை ரெயில் 10:20 மணியளவில் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தை அடைந்ததும், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், மாற்று திறனாளிகளுக்கான பெட்டியில் நான் டிக்கெட் எடுத்து இருந்தேன், ஆனால் எனக்கு மேல் படுக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. நான் தரையில்தான் படுத்து தூங்கினேன். எனக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என கேட்க கூட ஆள் கிடையாது. நான் சர்வதேச நிலையில் உதவியை நாடவில்லை, ஒரு மனிதாபிமான உதவியை செய்யுங்கள், என வேதனையுடன் கூறினார். 

மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு மாற்று திறனாளிகளுக்கான பெட்டியில் பயணம் செய்ய வேண்டும், அப்போதான் அவருக்கு உண்மை என்னவென்று தெரியவரும் என்றும் குறிப்பிட்டு உள்ளார் சுவர்ணா ராஜ். தாய்லாந்து பாரா டேபிள் டென்னிஸ் ஓபன் 2013-ல் சுவர்ணா ராஜ் பதக்கம் வென்றவர். தென் கொரியாவில் நடந்த ஆசியன் பாரா விளையாட்டு போட்டியில் கலந்துக் கொண்டவர். அவர் மாற்று திறனாளிகளுக்காக தொண்டு நிறுவன்ம் ஒன்றையும் நடத்தி வருகிறார். 

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு பா.ஜனதா வேட்பாளிடம் தோல்வி கண்டவர். 

இந்தியாவின் பாராலிம்பிக்ஸ் கமிட்டி துணை தலைவர் குஷாரன் சிங் பேசுகையில், இப்பிரச்சனையை ரெயில்வே அமைச்சகத்திடம் எடுத்து செல்வதாக கூறினார். சுவர்ணா ராஜ்க்கு பிற விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

Next Story