நாட்டில் 11¼ லட்சம் போலி ‘பான்’ கார்டுகள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் அதிர்ச்சி தகவல்

நாட்டில் 11¼ லட்சம் போலி ‘பான்’ கார்டுகள் புழக்கத்தில் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
‘பான்’ என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.
இந்த அமர்வு, கடந்த 9–ந் தேதி தனது தீர்ப்பை வழங்கியது. ஜூலை 1–ந் தேதி முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெறவும் ஆதார் எண் கட்டாயம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
போலி ‘பான்’ கார்டுகள்157 பக்கங்களைக் கொண்ட இந்த தீர்ப்பில் இடம் பெற்றுள்ள ஒரு தகவல், அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. அந்த தகவல், நாட்டில் 11 லட்சத்து 35 ஆயிரம் போலி ‘பான்’ கார்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டிருப்பதுதான்.
இவற்றில், 10 லட்சத்து 52 ஆயிரம் ‘பான்’ கார்டுகள், தனிப்பட்ட நபர்களுக்குரியவை ஆகும்.
பொருளாதார பாதிப்புஇது தொடர்பாக தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
இந்த வழக்கில் வழக்குதாரர் தரப்பில் ஆஜராகி வாதாடியபோது, வருமான வரிச்சட்டம் பிரிவு 139 ஏஏ, வரும் ஜூலை 1–ந் தேதி முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெறவும் ஆதார் எண்ணையோ அல்லது ஆதார் எண் பெற அளித்த விண்ணப்பத்தின் அடையாள எண்ணையோ குறிப்பிடுவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது; ஆனால் 0.4 சதவீதம் பேர் தான் போலி ‘பான்’ கார்டுகள் வைத்துள்ளனர்; எனவே இந்த சட்டப்பிரிவே தேவையில்லை என்று கூறினர்.
ஆனால் நாங்கள் சதவீத புள்ளிவிவரங்கள் அடிப்படையில் செல்ல முடியாது. 10 லட்சத்து 52 ஆயிரம் பேர் போலி ‘பான்’ கார்டுகள் வைத்துள்ளனர். இது சிறிய அளவிலானது என சொல்லலாம். ஆனால் இதுவும், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கலாம். நாட்டுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.