கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி: கைதாக வாய்ப்பு

எச்.டி குமாரசாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எச்.டி குமாரசாமிக்கு எதிரான ஊழல் வழக்கில் அவரது முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால், எந்நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பிரதான கட்சிகளில் ஒன்றான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் எச்.டி குமாரசாமி. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனான இவர் முதல் மந்திரியாக பதவி வகித்த காலமான 2006-2007 ஆண்டு கால கட்டத்தில் தனியார் சுரங்க நிறுவனம் ஒன்றிற்கு உதவி செய்வதற்காக மிகப்பெரிய அளவில் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக சுரங்க அனுமதி வழங்கியதாக ஐஏஎஸ் அதிகாரி கங்காராம் படோரியா கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து குமாரசாமியும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் குமாரசாமி சார்பில் பெங்களூரு செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பேரில் குமாரசாமிக்கு கடந்த மாதம்(மே) 7 நாட்கள் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அந்த முன்ஜாமீன் காலத்தையும் சிறப்பு கோர்ட்டு மேலும் நீட்டித்தது. இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை பெங்களூரு செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது குமாரசாமி சார்பில் ஆஜரான வக்கீல், முன்ஜாமீன் காலத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.இதை நிராகரித்த நீதிபதி, குமாரசாமியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து குமாரசாமி கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story