வங்கி ஊழியர்கள் 6 மாதங்களில் கன்னட மொழியை கற்கவேண்டும், இல்லையெனில் வேலை பறிபோகும்


வங்கி ஊழியர்கள் 6 மாதங்களில் கன்னட மொழியை கற்கவேண்டும், இல்லையெனில் வேலை பறிபோகும்
x
தினத்தந்தி 8 Aug 2017 10:12 AM GMT (Updated: 8 Aug 2017 10:12 AM GMT)

6 மாதங்களில் கன்னட மொழியை கற்கவேண்டும், இல்லையெனில் வேலையை இழப்பீர்கள் என வங்கி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கன்னட மொழி பள்ளிகளில் கட்டாயம் என்ற நிலையை அடுத்து வங்கிகளில் மொழியானது கட்டாயம் என்ற கொள்கையை கையில் எடுக்கப்பட்டு உள்ளது. கன்னட மேம்பாட்டு ஆணையம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் மற்றும் கிராமிய வங்கிகள் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வங்கி ஊழியர்களுக்கு கன்னட மொழியானது கட்டாயம் என்பதை உறுதி செய்யுங்கள் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இன்னும் 6 மாதங்களில் கன்னட மொழியை கற்கவில்லை என்றால் அவர்கள் வேலையை இழக்க வாய்ப்பு உள்ளது. 

இதுதொடர்பாக கன்னட மேம்பாட்டு ஆணைய தலைவர் எஸ்ஜி சித்தராமையா செய்தி இணையதளத்திற்கு அளித்து உள்ள பேட்டியில்,  கன்னட மொழியை கற்றுக் கொள்ள நாங்கள் 6 மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளோம். 6 மாதங்கள் கழித்தும் கன்னட மொழி தெரியாத ஊழியர்களை உடனடியாக வேலையை விட்டு நீக்கவும் வங்கிகளின் பிராந்திய தலைமைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என கூறிஉள்ளார். அவருடைய தகவலின்படி இதுதொடர்பாக தொடர்ச்சியாக நோட்டீஸ் வங்கிகளுக்கு வழங்கப்பட்டாலும், கன்னட மொழியை கொண்டு வருவதில் வங்கிகள் நாட்டம் காட்டவில்லை என தெரிகிறது.

“மாநிலத்தில் பெரும்பாலான மக்களுக்கு கன்னட மொழி மட்டுமே தெரியும். அவர்களை பற்றிதான் நாங்கள் நினைக்கிறோம். பிராந்திய மொழிக்கு வங்கிகள் மரியாதை கொடுக்கவில்லை என்றால், பிற்கால மோதலுக்கு வழிவகை செய்யும் என்பதை மறுக்க முடியாது என்பது உண்மை. கன்னட மொழியை ஊழியர்கள் உடனடியாக கற்க வேண்டும் என்பதை வங்கிகள் உறுதிசெய்ய வேண்டும்,” என கூறிஉள்ளார் எஸ்.ஜி. சித்தாரமையா.

 வங்கி வளாகத்திற்கு உள்ளேயே மொழியை கற்பிக்க மையங்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இப்போது விண்ணப்ப படிவங்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டும் உள்ளது. விளம்பரங்கள், ஆண்டு அறிக்கைகள் உள்ளிட்டவற்றில் வங்கிகள் மூன்று மொழி கொள்கையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். கன்னட மொழியில் மக்களால் வங்கி படிவங்களை நிரப்ப முடியும். இது கிராமிய வங்கிகளுக்கு மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டு உள்ளார். “ரிசர்வ் வங்கியின் கொள்கையின்படி வங்கிகள் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும். கர்நாடக மாநிலத்தில் வேலைக்கு பணியாளர்களை எடுக்கும் போது, கன்னட மொழி தெரிந்த ஊழியர்களை பணி அமர்த்துவதை உறுதி செய்ய வேண்டும். 

இதனை அவர்கள் செய்யவில்லை என்றால், ஊழியர்கள் 6 மாதங்களில் கன்னட மொழியை கற்கவேண்டும். அப்படியில்லை என்றால் அவர்கள் வேலையைவிட்டு நீக்க வேண்டும். இந்த விதிமுறையானது கடுமையாக பின்பற்ற வேண்டும் என கன்னட மேம்பாட்டுத்துறை ஆணைய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கன்னட மேம்பாடுத்துறை ஆணைய அதிகாரிகளால் வங்கிகளில் திடீரென ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் கூறிஉள்ளார் எஸ்ஜி சித்தராமையா. 

பெங்களூருவில் வங்கி பணியில் இருக்கும் பணியாளர் ரஞ்சித் பேசுகையில், புது விதிமுறை தொடர்பாக செவ்வாய் கிழமை காலை தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளார். 

Next Story