பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் கைது

சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு உண்டு உறைவிட பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு ரக்ஷா பந்தனையொட்டி கலாசார நிகழ்ச்சிக்கு மத்திய ரிசர்வ் படை போலீசார் ஏற்பாடு செய்து இருந்தனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு உண்டு உறைவிட பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு ரக்ஷா பந்தனையொட்டி கலாசார நிகழ்ச்சிக்கு மத்திய ரிசர்வ் படை போலீசார் ஏற்பாடு செய்து இருந்தனர். நிகழ்ச்சியின் போது கழிவறைக்கு சென்ற சில மாணவிகளை, மத்திய ரிசர்வ் படை போலீசார் 3 பேர் பின்தொடர்ந்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர்.
இது குறித்து அந்த பள்ளி விடுதி பொறுப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் சமிம் அகமது (வயது 31) மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அவருக்கு உடன் சென்ற 2 பேர் உடந்தையாக இருந்து உள்ளனர். இதையடுத்து சமிம் அகமதுவை போலீசார் கைது செய்தனர்.
இந்த புகார் குறித்து மத்திய ரிசர்வ் படை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். சமிம் அகமதுவுக்கு உடந்தையாக இருந்த 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகமும் உத்தரவிட்டு உள்ளது.