சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்

சுவையான மீன் இனங்களை உள்நாட்டு நீர்நிலைகளில் வளர்ப்பதற்கு மேற்கு வங்க அரசு தீவிரம் காட்ட முனைந்துள்ளது.
கொல்கத்தா
பிரபலமான, சுவையான மீன் இனங்களான சிங்கி, மாகுர், டங்கரா, பாடா மற்றும் கோய் போன்றவை மழைக்காலங்களில் ஏரிகளிலும், ஆறுகளிலும் இனப்பெருக்கம் செய்ய அவற்றின் முட்டைகளை இடுவது வழக்கம். இவை வங்காள மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படுகின்றன.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல மீனவர் சட்டவிரோதமாக கொசுவலைகளை பயன்படுத்தி இந்த மீன் இனங்களை பிடிக்கின்றனர். இந்த முயற்சியில் அவர்கள் முட்டைகளை உடைத்து விடுகின்றனர். இதனால் மீன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இது தவிர விவசாயிகள் தங்கள் நிலப்பகுதிகளில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்த மீன் இனங்கள் உண்ணும் நுண்ணுயிரிகளை அழித்து விடுகின்றன. குறிப்பாக மழைக்காலத்தில் இந்தப் போக்கு அதிகரிக்கிறது. நுண்ணுயிர்களின் இழப்பினால் மீன்கள் நோய்களுக்கு ஆளாகின்றன.
இந்த ஆண்டு மழைக்காலத்தில் மீன் குஞ்சுகளை நீர் நிலைகளில் விடுவதற்கு வங்காள மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றன. மீன்வளத்துறை கொசுவலையை பயன்படுத்துதல் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல் ஆகியவற்றின் தீமையை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கிறது.
நீர்நிலைகளில் இயற்கையான வழிகளில் மீன் இனங்கள் வளர்வது மாநிலத்தின் சூழலியலை பாதுகாப்பதை உறுதி செய்கிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
Related Tags :
Next Story