உ.பியில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 49 குழந்தைகள் பலி


உ.பியில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 49 குழந்தைகள் பலி
x
தினத்தந்தி 4 Sep 2017 8:04 AM GMT (Updated: 4 Sep 2017 8:04 AM GMT)

உத்தரபிரதேச மாநிலம் பருக்தாபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 49 குழந்தைகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பருக்தாபாத்,

உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து சுமார் 400 கி.மீட்டர் தொலைவில் உள்ள பரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த ஒரு மாதத்தில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உள்ளூர் ஊடகங்களில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பான செய்தி வெளியானதும், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அலுவலகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டது.

 மாவட்ட மாஜிஸ்திரேட்டு  ரவீந்திர குமார் உடனடியாக  மருத்துவமனைக்கு அனுப்பட்டார். மாஜிஸ்திரேட்டு நடத்திய விசாரணையில் குழந்தைகள் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலியானது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை மட்டும் காரணமல்ல மருந்துகள் பற்றாக்குறையும் தான் என்று கூறப்படுகிறது. மருத்துவமனையின் உயர் அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள பரூக்காபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக பெற்றோர்கள் புகார் அளித்ததையடுத்து, மாவட்ட மாஜிஸ்திரேட்டு சென்று மருத்துவமனையில் விசாரணை நடத்தியதாகவும் , மருத்துவமனையில் அப்போது பணியாளர்கள் இல்லாத காரணத்தால், எத்தனை குழந்தைகள் பலியாகினர் என்பது பற்று உறுதியான தகவல் வரவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story