காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பலி


காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பலி
x
தினத்தந்தி 9 Sep 2017 9:30 PM GMT (Updated: 9 Sep 2017 7:39 PM GMT)

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பலியானார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோப்பூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், நேற்று அதிகாலையில் அங்கு முற்றுகையிட்டனர்.

அந்த பகுதியில் வேறு யாரும் நுழையாதபடிக்கு அவர்கள் ‘சீல்’ வைத்தபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினர். அதற்கு பாதுகாப்பு படையினரும் தங்களது துப்பாக்கிகளைக் கொண்டு பதிலடி கொடுத்தனர்.

இதில் ஷாகித் அகமது ஷேக் என்பவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதிகளில் ஒருவர், முன்பு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவத்தின்போது, பாதுகாப்பு படையினர் மீது உள்ளூர்வாசிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தெற்கு காஷ்மீரில் அனந்த்நாக்கில் போலீஸ் ரோந்து படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு போலீஸ்காரர் பலி ஆனார்.


Next Story