குர்மீத்தின் ஆசிரமத்தில் ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

குர்மீத்தின் அறையில் இருந்து பெண் சீடர்களின் விடுதிக்கு செல்லும் வகையில் ரகசிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
லக்னோ,
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமை ஆசிரமத்தில், குர்மீத்தின் அறையில் இருந்து பெண் சீடர்களின் விடுதிக்கு செல்லும் வகையில் ரகசிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் பிரபலமாக விளங்கி வரும் ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரகீம் சிங்கிற்கு கற்பழிப்பு வழக்கில் சமீபத்தில் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அரியானாவின் ரோட்டக் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சிர்சாவில் உள்ள அவரது தலைமை ஆசிரமத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதில் ரூ.15 ஆயிரம் ரொக்கம், ரூ.7 ஆயிரம் மதிப்பிலான செல்லாத நோட்டுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டன. மேலும் குர்மீத் சிங், பெண்களுடன் உல்லாசமாக இருக்க பயன்படுத்தியதாக கூறப்படும் ரகசிய குகையும் ஆசிரமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆசிரமத்தில் நேற்று 2–வது நாளாக சோதனை நடந்தது. அப்போது ஆசிரமத்தில் ஒரு ரகசிய சுரங்கப்பாதை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது குர்மீத் சிங் தங்கும் அறையில் (குபா) இருந்து, ‘சாத்வி நிவாஸ்’ எனப்படும் பெண் சீடர்களின் விடுதி வரை செல்லும் வகையில் போடப்பட்டு இருந்தது. அது முழுவதும் சேறு நிறைந்திருந்தது.மேலும் சட்ட விரோதமான முறையில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றும் ஆசிரமத்தில் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. அங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகளில் பயங்கரமான சில வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரியவந்தது. அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் உள்ள ஜி.சி.ஆர்.ஜி என்ற தனியார் மருத்துவக்கல்லூரிக்கு சிர்சா ஆசிரமத்தில் இருந்து 14 உடல்கள் அனுப்பி வைக்கப்பட்ட விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அனுமதி இன்றியும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் வழங்கப்பட்ட இந்த உடல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரபிரதேச அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.ஆனால் அந்த உடல்களை உரிய அனுமதியுடன்தான் பெற்றதாக ஜி.சி.ஆர்.ஜி மருத்துவக்கல்லூரி கூறியுள்ளது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், ‘புனிதமான மருத்துவ சேவைக்காக தேரா சச்சா சவுதா தொண்டர்கள் தங்கள் உறவினரின் உடல்களை பல கல்லூரிகளுக்கு தானமாக வழங்கி வருகின்றனர். இந்த 14 உடல்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர் வழங்கிய பிரமாண பத்திரம் எங்களிடம் உள்ளது. இந்த ஆவணங்களை நாங்கள் போலீசாரிடம் வழங்கி உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக எடுத்து விசாரித்து வரும் மாநில போலீசார், அந்த 14 பேரின் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.