விஜய் மல்லையாவின் விமான நிறுவனத்துக்கு கடன் கொடுத்ததில் விதிமீறல்


விஜய் மல்லையாவின் விமான நிறுவனத்துக்கு கடன் கொடுத்ததில் விதிமீறல்
x
தினத்தந்தி 8 Oct 2017 11:00 PM GMT (Updated: 8 Oct 2017 9:55 PM GMT)

விஜய் மல்லையாவின் விமான நிறுவனத்துக்கு கடன் கொடுத்ததில் நடந்த விதிமீறல் தொடர்பாக வங்கி உயர் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பல்வேறு வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்தவில்லை. அதனால் விஜய் மல்லையா மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம், லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அங்கு 2 தடவை கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நடந்த தவறுகள் குறித்து விசாரணை நடத்திய கடுமையான மோசடிகள் பற்றிய விசாரணை பிரிவு, தனது விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:–

கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்ததில் ஏராளமான விதிமீறல்கள் நடந்திருப்பது கடுமையான மோசடிகள் பற்றிய விசாரணை பிரிவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிங்பி‌ஷர் நிறுவனத்தின் வரவு–செலவு பலவீனமாக இருந்தது. கடன் பெறும் தகுதி மிக குறைவாக இருந்தது. இருப்பினும், விதிமுறையை மீறி, அந்நிறுவனத்துக்கு வங்கிகள் கடன் கொடுத்துள்ளன.

பொதுவாக, ஒரு நிறுவனத்தின் திறன் பற்றி 2 வெவ்வேறு மதிப்பீட்டாளர்களிடம் அறிக்கை பெற்றுத்தான் கடன் அளவை முடிவு செய்ய வேண்டும். ஆனால், கிங்பி‌ஷர் நிறுவனம் பற்றி ஒரே ஒரு மதிப்பீட்டாளரிடம் அறிக்கை பெற்று கடன் கொடுத்துள்ளனர்.

எனவே, இந்த விதிமீறல்களில், விசாரணை பிரிவு சுட்டிக்காட்டிய எல்லா வங்கிகளும், அவற்றின் உயர் அதிகாரிகளும் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். எந்தெந்த மத்திய அரசு உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று ஆராயப்பட்டு வருகிறது. அவர்களும் பல்வேறு விசாரணை அமைப்புகளின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள்.

கடன் கொடுத்த சில வங்கிகளிடம், சில தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. கிங்பி‌ஷர் நிறுவனத்தில் பணியாற்றியபோது தவறு செய்த நிர்வாகிகள் மீதும் விசாரணை நடைபெறும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story