சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சிபிஐ முடிவு


சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சிபிஐ முடிவு
x
தினத்தந்தி 13 Oct 2017 3:39 AM GMT (Updated: 13 Oct 2017 3:39 AM GMT)

சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி அருகே உள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நூபுர் தல்வார். இருவரும் பல் மருத்துவர்கள். இவர்களது மகள் ஆருஷி (வயது 14). 2008–ம் ஆண்டு மே மாதம் ஆருஷி வீட்டில் உள்ள அவளது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள். அவளது தொண்டையில் வெட்டுக்காயம் இருந்தது.

வீட்டில் இருந்த வேலைக்காரர் ஹேம்ராஜ் (45) என்பவரையும் காணவில்லை. இதனால் ஹேம்ராஜ் தான் ஆருஷியை கொலை செய்திருப்பார் என்று முதலில் கருதப்பட்டது. 2 நாளில் ஹேம்ராஜின் உடல் அதே வீட்டின் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உத்தரபிரதேச மாநில போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை வழக்கு உத்தரபிரதேச மாநிலம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. ஆனால் இந்த கொலையை துப்புதுலக்குவதில் மாநில போலீசார் மிகவும் மந்தமாக செயல்பட்டனர். இதனால் மேலும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அப்போது முதல்–மந்திரியாக இருந்த மாயாவதி இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றினார்.சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார், நூபுர் ஆகியோரை கைது செய்தனர். ஆருஷிக்கும், ஹேம்ராஜுக்கும் தொடர்பு இருப்பதாக ஆருஷியின் பெற்றோர் சந்தேகப்பட்டதால் இருவரையும் அவர்கள் கொலை செய்ததாக கூறப்பட்டது.இந்த வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ. கோர்ட்டு 2013–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி ராஜேஷ் தல்வார், நூபுர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து இருவரும் காசியாபாத் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து இருவர் சார்பிலும் அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பி.கே.நாராயணா, ஏ.கே.மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்துவந்தது.பரபரப்பான இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.  நீதிபதிகள் ஆருஷியின் பெற்றோர் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.  

 இந்த வழக்கில் ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், தல்வார் தம்பதிகள் இன்று சிறையில் இருந்து வெளியேவருவார்கள் என கூறப்படுகிறது.


Next Story