குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவது விதி மீறல்- முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி


குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவது விதி மீறல்- முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி
x
தினத்தந்தி 17 Oct 2017 9:57 AM GMT (Updated: 17 Oct 2017 9:57 AM GMT)

குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவது விதி மீறல்- முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

இமாச்சல பிரதேச மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால், இந்திய தேர்தல் ஆணையம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதை தவிர்த்திருக்கலாம் என, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில சட்டசபை  மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை இரண்டின் பதவிக்காலமும் வரும் 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தேதிகளை மட்டும் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்தார். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நடத்தை விதிமுறைகள் அம்மாநிலங்களில் உடனடியாக அமலாகிவிடும் எனவும், அதனால், அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை உருவாகும் என்பதாலேயே, குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என கூறினார்.

இந்த அறிவிப்பு  இந்திய தேர்தல் ஆணையம் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலை காலம் தாழ்த்துவதன் மூலம், அம்மாநிலத்தில் பிரதமர் மோடியும், பாஜகவும் மக்களை ஈர்க்க கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்க வழிவகுக்கும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் குற்றம்சாட்டின.

அதுமட்டுமல்லாமல், இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் மரபை மீறும் செயல் எனவும், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது எனவும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து, டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால், இந்திய தேர்தல் ஆணையம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதை தவிர்த்திருக்கலாம் .
சிறந்த நிர்வாகத்தின் மூலம் இந்த விமர்சனங்களை தேர்தல் ஆணையம் தவிர்த்திருக்கலாம். குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு ஒரு வார காலம் முன்பின் இடைவெளியில் தேர்தல் நடத்தப்படலாம் என நினைத்தேன். இந்த முடிவு, வாக்காளர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் என நான் கருதவில்லை. நிர்வாக ரீதியாக ஒரு தீர்வை எடுக்க முடிந்ததா என்பதே என் கவலை . நான் ஒரு தீர்வை கண்டுபிடித்திருப்பேன் என நினைக்கிறேன்”

மேலும், குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரண பணிகள் பாதிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெள்ள தடுப்பு பணிகளை அரசியல்வாதிகள் மேற்கொள்ளப் போவதில்லை. அதிகாரிகள்தான் மேற்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் கால நிவாரண பணிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே அமலில் உள்ள எந்த திட்டங்களும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நின்றுவிடப்போவதில்லை. மாறாக, புதிய திட்டங்களைத்தான் அறிவிக்கக்கூடாது”, என கூறினார்.

Next Story