மண்டல, மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 15-ந் தேதி நடை திறப்பு

மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 15-ந் தேதி நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு, கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் இருந்து பூரண விரதம் தொடங்கி, இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.
நடை திறப்பு
மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. வருகிற 16-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய மேல்சாந்தி ஏ.வி.உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.
பூஜைகள்
16-ந் தேதி முதல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும். மண்டல பூஜை அடுத்த மாதம் 26-ந் தேதியும், அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடக்கிறது.
Related Tags :
Next Story