மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது: சஞ்செய் நிரூபம் சொல்கிறார்


மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது: சஞ்செய் நிரூபம் சொல்கிறார்
x
தினத்தந்தி 18 Dec 2017 10:10 AM GMT (Updated: 18 Dec 2017 10:09 AM GMT)

வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று சஞ்செய் நிரூபம் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

நடந்து முடிந்த இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ள பாஜக, குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்தும், இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அரியணையில் மீண்டும் ஏறவும் உள்ளது. பாரதீய ஜனதாவின் வெற்றிக்கு வாக்குப்பதிவு இயந்திரமே காரணம் என்று மகராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் சஞ்செய் நிரூபம் குற்றம் சாட்டியுள்ளார்.

சஞ்செய் நிரூபம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது::- “ குஜராத் முழுவதும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான அலை வீசியது. பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது, பல இடங்களில் இருக்கைகள் காலியாக இருந்தன. பாரதீய ஜனதாவுக்கு இன்று கிடைத்திருக்க கூடிய வெற்றி மக்களால் கிடைத்த வெற்றி இல்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தால் கிடைத்த வெற்றி ஆகும். துவக்கத்தில் இருந்தே எங்களுக்கு இந்த சந்தேகம் இருந்தது. வாக்குப்பதிவு இயந்திரம் இந்திய  ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி சஞ்செய் நிரூபம் தனது டுவிட்டர் பக்கத்தில், காங்கிரஸ் கட்சி 125 முதல் 140 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சி குஜராத்தில் வெற்றி பெறும் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை நினைவு கூர்ந்துள்ள சஞ்செய் நிரூபம், எனது முந்தைய டுவிட் பதிவில் நான் உறுதியாக உள்ளேன். வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படாமல் இருந்திருந்தால், தேர்தல் முடிவு நான் முன்பு கூறியபடியே இருந்திருக்கும்” என தெரிவித்துள்ளார். 

Next Story