குஜராத் தேர்தல்: மோடியின் சொந்த தொகுதியை காங்கிரசிடம் இழந்தது பாஜக


குஜராத் தேர்தல்: மோடியின் சொந்த  தொகுதியை காங்கிரசிடம் இழந்தது பாஜக
x
தினத்தந்தி 18 Dec 2017 2:26 PM GMT (Updated: 18 Dec 2017 2:26 PM GMT)

குஜராத் தேர்தலில் பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள போதிலும், மோடியின் சொந்த தொகுதியை காங்கிரசிடம் பாஜக இழந்துள்ளது.

அகமதாபாத்,

குஜராத்தில் ஆட்சியை மீண்டும் பாரதீய ஜனதா தக்க வைத்துள்ள போதிலும், பிரதமர் மோடியின் சொந்த நகரமான வத்நகர் அடங்கியுள்ள உன்ஜா சட்டமன்ற தொகுதியில், பாஜக தோல்வியை தழுவியுள்ளது. மேஷனா மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆஷா படேலும் பாரதீய ஜனதா தரப்பில் நடப்பு எம்.எல்.ஏவாக இருந்த நாரயண் படேலும் போட்டியிட்டனர்.  இதில், 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆஷா படேல் வெற்றி பெற்றார். கடந்த 2012 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது,  ஆஷா படேல் தோல்வியை அடைந்திருந்தார். 

ஆனால், படேல் சமூகத்தவரின் போராட்டங்கள் தாகூர் இனத்தவர்கள் காங்கிரஸ் பக்கம் சாய்ந்தது, போன்றவற்றால், காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா படேல் வெற்றி அடைந்து இருக்கிறார். உன்ஜா தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 12 ஆயிரம் வாக்களர்களில் 77 ஆயிரம் படேல் சமூகத்தினரும்,  50 ஆயிரம் தாகூர் இன வாக்காளர்களும் இருந்தனர். 

இவர்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.  உன்ஜா தொகுதியில் ராகுல் காந்தி, மோடி ஆகிய இருவரும்  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. மோடியின் சொந்த தொகுதியிலேயே பாஜக தோல்வியை தழுவியிருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story