ஹபீஸ் சயீத்துக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது தேசிய புலனாய்வு முகமை


ஹபீஸ் சயீத்துக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது தேசிய புலனாய்வு முகமை
x
தினத்தந்தி 18 Jan 2018 9:33 AM GMT (Updated: 18 Jan 2018 11:49 AM GMT)

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்த வழக்கில் ஹபீஸ் சயீத் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. #HafizSaeed #TerrorFundingCase.

புதுடெல்லி,

பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பது காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பிரிவினைவாதத்தை துண்டும் செயல்களில் ஈடுபடுவது போன்ற வழக்குகள் தொடர்பாக லஷ்கர் இ தொய்பா இயக்க தலைவர் ஹபீஸ் சயீத், மற்றும் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்க தலைவர் சையது சலாஹூதினுக்கு ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பதிரிக்கையை தாக்கல் செய்த என்.ஐ.ஏ, விசாரணையை தொடர்வதற்கும் அனுமதி கோரினர். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பினர் தாக்கல் செய்துள்ளனர். 

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் சட்டவிரோத செயல்பாடுகள்(தடுப்பு) சட்டத்தின் படி , ஆறு மாதங்களில் விசாரணை முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தவறினால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் பெற தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையின் போது, கணிசமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான ஆவணங்களையும் கைப்பற்றியதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 950 குற்றத்தை நிரூபிக்கும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ள தேசிய புலனாய்வு முகமை 300 சாட்சியங்கள் இந்த வழக்கில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. 

ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதையடுத்து, காஷ்மீரில் நடைபெற்ற தொடர் கல்வீச்சு சம்பவங்களுக்கு பிறகு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக  பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானியின் உறவினர் அல்டாப் அகமது ஷா, மிர்வாய்ஸ் உமர் பரூக் தலமையிலான ஹூரியத் மாநாட்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் அயாஸ் அக்பர், கிலானி தலைமையிலான ஹூரியத் அமைப்பின் செய்தி தொடர்பாளரும் பிரிவினைவாதியுமான நயீம் கான்  ஆகியோர் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story