டெல்லியில் இருந்த ரோகிங்கிய அகதிகள் முகாமில் தீ விபத்து, முகாம் முழுவதும் சாம்பலானது

டெல்லியில் இருந்த ரோகிங்கிய அகதிகள் முகாமில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் முகாம் முழுவதும் எரிந்து சாம்பலானது.
டெல்லி,
தலைநகர் டெல்லியில் தென்கிழக்கு பகுதியில் ரோகிங்கியா அகதிகள் முகாம் உள்ளது. இங்கு மியான்மர் நாட்டில் இருந்து வந்த 228 அகதிகள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாமில் அதிகாலை திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென் பரவியதால் அங்கு தங்கியிருந்த அகதிகள் அவசரமாக வெளியேறினர். அவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தகவலறிந்து அங்கு 10-க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. அவை மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் 44-க்கு மேற்பட்ட டெண்ட்கள் எரிந்து சேதமாகின. விசாரணையில், அகதிகள் முகாமில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
ஆனால், இது விபத்து இல்லை எனவும் நாசவேலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் சிலர் தெரிவித்தனர். தீ விபத்தில், ரோகிங்கிய மக்களின் அனைத்து ஆவணங்களும் எரிந்து சேதம் ஆகின. இந்தியாவில் ரோகிங்கிய மக்களுக்கு இருந்த ஒரே முகாம் இது மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story