மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி காரை பின்தொடர்ந்த 4 மாணவர்கள் மீது குற்றச்சாட்டு அறிக்கை பதிவு

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி காரை பின்தொடர்ந்த டெல்லி பல்கலை கழகத்தின் 4 மாணவர்கள் மீது குற்றச்சாட்டு அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் லுட்யென்ஸ் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரலில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி சென்ற காரை பின் தொடர்ந்து மற்றொரு கார் சென்றுள்ளது.
அதனை தடுத்து நிறுத்திய போலீசார் காரில் இருந்த 4 பேரை கைது செய்து சாணக்யபுரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 4 பேரும் டெல்லி பல்கலை கழக மாணவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களது ரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பெண்ணை தீய எண்ணத்துடன் பின்தொடர்தல், அச்சுறுத்துதல் மற்றும் நன்னடத்தையை துன்புறுத்தும் நோக்குடன் செயல்படுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் 18 முதல் 19 வயது நிரம்பியவர்கள். சீதான்ஷு, கரண், அவினாஷ் மற்றும் அமித் என 4 பேரும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். ஜாமீனில் அவர்கள் வெளியே உள்ளனர்.
இதுபற்றி டெல்லி பல்கலை கழக மாணவர்கள் 4 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு இறுதி அறிக்கை ஒன்றை டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை வருகிற அக்டோபர் 15ந்தேதிக்கு நீதிபதி ஸ்னிக்தா சார்வாரியா விசாரணைக்கு எடுத்து கொள்கிறார்.