ஹோமியோபதி துறையை புதுப்பிப்பதற்கான சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


ஹோமியோபதி துறையை புதுப்பிப்பதற்கான சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 16 May 2018 12:14 PM GMT (Updated: 16 May 2018 12:14 PM GMT)

மத்திய ஹோமியோபதி கவுன்சில் உயரதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அந்த துறையை புதுப்பிப்பதற்கான சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. #UnionCabinet

புதுடெல்லி,

மத்திய ஹோமியோபதி கவுன்சில் உயரதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  அதன் தலைவர் சி.பி.ஐ. வளையத்திற்குள் உள்ளார்.  இந்த நிலையில், ஹோமியோபதி துறையை புதுப்பிப்பது பற்றிய சட்டம் ஒன்றிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்ட துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத், பல்வேறு அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என கூறினார்.

மத்திய ஹோமியோபதி கவுன்சிலின் தலைவர் சி.பி.ஐ. மற்றும் பிற வளையத்திற்குள் உள்ளார்.  கல்வியின் தரம் சீர்கெட்டு வருகிறது.  நாட்டில் ஹோமியோபதி கல்விக்கு முறையான, தொழில் சார்ந்த சுற்று சூழல் தேவையாக உள்ளது என கூறினார்.

இந்த சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வேண்டியுள்ளது என கூறி பிற விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

வருகிற நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடரில், இந்த துறையை புதுப்பிப்பதற்கான சட்டம் மற்றும் ஆணையை செயல்படுத்துவதற்கான மசோதா ஆகியவை எடுத்து கொள்ளப்படும் என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story