கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பரமேஸ்வர் தேர்வு


கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பரமேஸ்வர் தேர்வு
x
தினத்தந்தி 17 May 2018 3:09 PM GMT (Updated: 17 May 2018 3:09 PM GMT)

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பரமேஸ்வர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். #CongressParty

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12ந்தேதி நடந்து முடிந்தது.  அதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 15ந்தேதி நடந்தது.  இதில் பாரதீய ஜனதா கட்சி 104 தொகுதிகளை கைப்பற்றியது.  அதிக தொகுதிகளை கைப்பற்றிய தனி கட்சியாக அது உருவெடுத்தது.

மொத்தமுள்ள 224 உறுப்பினர்களுக்கான சட்டசபைக்கு பெரும்பான்மையை பெற பாரதீய ஜனதாவிற்கு 8 சீட்டுகள் பற்றாக்குறையாக இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியானது தனது ஆதரவை மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு வழங்க முடிவு செய்தது.

இதனால் அந்த இரு கட்சிகளும் பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதாவிற்கு போட்டியாக உருவானது.  இந்த நிலையில் இரு கட்சிகளும் ஆளுநரிடம் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சட்டசபை குழு தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்.  இதேபோன்று மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் சட்டசபை குழு தலைவராக குமாரசாமி தேர்வானார்.

இந்நிலையில், ஆளுநர் விடுத்த அழைப்பினை அடுத்து எடியூரப்பா இன்று முதல் மந்திரியாக பதவியேற்று கொண்டார்.  அவர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஈகிள்டன் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  இங்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பரமேஸ்வர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வருகிறார்.


Next Story