சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை

கர்நாடகத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 117 பேர், சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்து, ‘வாட்ஸ்அப்‘பில் உலா வரும் நகைச்சுவையை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஒருவரே கூறி கலகலப்பை உண்டாக்கினார்.
ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று காரசார விவாதம் நடந்தது. அதைக்காண கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல்–மந்திரி எடியூரப்பா சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி உணர்ச்சி பொங்க வாதிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, நீதிபதி ஏ.கே.சிக்ரி, கோர்ட்டில் நிலவிய இறுக்கத்தை தணிக்கும்வகையில், ‘வாட்ஸ்அப்‘ நகைச்சுவையை கூறினார்.
‘‘சமூக வலைத்தளத்தில் நான் ஒரு செய்தியை பார்த்தேன். 117 எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள சொகுசு விடுதியின் உரிமையாளர், தனக்கு 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், அதனால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படியும் கவர்னருக்கு கடிதம் எழுதினாராம்‘ என்று நீதிபதி ஏ.கே.சிக்ரி கூறினார். அப்போது, கோர்ட்டில் பயங்கர சிரிப்பலை எழுந்தது.