தேசிய கீதத்துக்கு பாரதீய ஜனதா மரியாதை அளிக்கவில்லை; ராகுல் காந்தி


தேசிய கீதத்துக்கு பாரதீய ஜனதா மரியாதை அளிக்கவில்லை; ராகுல் காந்தி
x
தினத்தந்தி 19 May 2018 12:32 PM GMT (Updated: 19 May 2018 12:32 PM GMT)

தேசிய கீதத்துக்கு பாரதீய ஜனதா மரியாதை அளிக்கவில்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்.  அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார்.

ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 19ம் தேதி மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில் உணவு இடைவேளைக்கு பின் இன்று 3.30 மணியளவில் மீண்டும் கூடிய சட்டப்பேரவையில் பதவியேற்காமல் இருந்த மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று கொண்டனர்.  இதன்பின் எடியூரப்பா அவையில் பேசினார்.  அவர் பேசும்பொழுது, கர்நாடக விவசாயிகளுக்காக இறுதி மூச்சு உள்ளவரை சேவை செய்வேன் என கூறினார்.

பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்த கர்நாடக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற நிலையில் ஆட்சியமைக்க ஆளுநர் சார்பில் அழைப்பு விடப்பட்டது.  113 இடங்களை மக்கள் எங்களுக்கு அளித்து இருந்தால் இந்த நிலை இருந்திருக்காது என பேசினார்.  தொடர்ந்து உருக்கமுடன் பேசிய அவர் கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார்.

அதனை தொடர்ந்து அவர் அவையில் இருந்து வெளியேறினார்.  அங்கிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரிடம் கைகுலுக்கிய பின் அங்கிருந்து சென்றார்.

இந்த நிலையில் எடியூரப்பா பதவி விலகலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் இணைந்து பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்தியுள்ளன என்பதனை கண்டு வியக்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி அரசு குதிரை பேரத்தினை ஊக்குவித்தது.

பாரதீய ஜனதா கட்சியினரால் எந்தவொரு அமைப்பினையும் அவமரியாதை செய்ய முடியும்.  அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் தேசிய கீதத்துக்கு மரியாதை அளிக்கவில்லை என கூறினார்.

தேசிய கீதம் இசைத்து கொண்டிருந்தபொழுது உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினர் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Next Story