ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகளை நீக்க வேண்டும் - மத்திய அரசுக்கு, விசுவ இந்து பரிஷத் வற்புறுத்தல்


ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகளை நீக்க வேண்டும் - மத்திய அரசுக்கு, விசுவ இந்து பரிஷத் வற்புறுத்தல்
x
தினத்தந்தி 16 Sep 2018 10:15 PM GMT (Updated: 2018-09-17T00:58:26+05:30)

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகளை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, விசுவ இந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது.

லக்னோ,

விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் மிலிந்த் பராண்டே லக்னோ நகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக சாதுக்கள் மற்றும் இந்து துறவிகள் ஸ்ரீராம் ஜென்மபூமி என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பு ராமர் கோவிலை விரைவாக கட்டுவதற்குரிய உத்திகளை வகுப்பது தொடர்பாக டெல்லியில் அடுத்த மாதம்(அக்டோபர்) 5-ந்தேதி கூடி ஆலோசனை நடத்துகிறது.

இந்த கூட்டத்துக்கு பின்பு, விசுவ இந்து பரிஷத் ராமர் கோவில் இயக்கம் பற்றிய உத்திகளை முடிவு செய்யும். ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. குறிப்பாக சிற்ப வேலைப்பாடுகள் அனைத்தும் முடியும் நிலையில் உள்ளன.

அடுத்த ஆண்டு ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ந்தேதிகளில் அலகாபாத் நகரில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான இந்து சமய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் ராமர் கோவில் கட்டுவதற்கான இறுதி உத்திகள் வகுக்கப்படும்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் ஏராளமான தடைகள் உள்ளன. அவை எப்போது நீக்கப்படும் என்பதை தெளிவுபடுத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. மேலும், ராமர் கோவில் கட்டுவதில் சட்ட ரீதியாக உள்ள தடைகளை நீக்குவதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story