காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்; அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிட ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிட வேண்டும் என ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் வருகிற அக்டோபர் 8ந்தேதியில் இருந்து 4 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. காஷ்மீரில் 35ஏ அரசியலமைப்பு பிரிவில் மத்திய அரசு தெளிவான முடிவை எடுக்காத நிலையில் இந்த தேர்தலை புறக்கணிப்பது என தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டன.
இந்த சட்ட பிரிவின்படி அசையா சொத்துகளை வெளி மாநில மக்கள் சொந்தம் கொள்ள முடியாது. இதேபோன்று வெளிமாநில நபரை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு சொத்துரிமை மறுக்கப்படும்.
இந்த சட்ட பிரிவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. பஞ்சாயத்து தேர்தலுக்கு பின் வழக்கை விசாரிக்கும்படி மத்திய அரசு நீதிமன்றத்திடம் கேட்டு கொண்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிட வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன். இது மக்களிடம் தொடர்பு கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கும் என கூறினார்.
இந்த சந்திப்பிற்கு முன் இந்தோ-பாக் எல்லை பகுதி அருகே இரு ஸ்மார்ட் வேலி திட்டத்தினை சிங் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி, இந்திய எல்லை பகுதிகளில் ஊடுருவல், ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் ஆகியவற்றை தடுக்கும் வகையில் வலிமையான முறையில் வேலிகள் அமைக்கப்படும். கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் ரேடார்கள் ஆகியவை கொண்டு இந்த வேலிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
Related Tags :
Next Story