ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல்


ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல்
x
தினத்தந்தி 17 Sep 2018 10:15 PM GMT (Updated: 2018-09-18T01:37:12+05:30)

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை அக்டோபர் 8-ந்தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அதே கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்து உள்ளது.

இதைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கார்த்தி சிதம்பரம் அமலாக்கப்பிரிவின் விசாரணைக்கு முழுஅளவில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அப்படி இருந்தும் டெல்லி ஐகோர்ட்டு அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை தரப்பில் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே அவரை கைது செய்வது ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்படும் அமலாக்கப்பிரிவின் இதுபோன்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


Next Story