பீகாரில் தொகுதி பங்கீடு: தேஜகூட்டணி கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடிப்பு


பீகாரில் தொகுதி பங்கீடு: தேஜகூட்டணி கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2018 1:22 AM GMT (Updated: 2018-10-24T06:52:58+05:30)

பீகாரில் உள்ள 40 தொகுதிகளை பங்கீட்டு கொள்வதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள கட்சிகளுக்குள் இழுபறி நீடித்து வருகிறது.

பாட்னா, 

 மக்களவை தேர்தலை முன்னிட்டு, பீகாரில் உள்ள 40 தொகுதிகளை பங்கீட்டு கொள்வதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள கட்சிகளுக்குள் இழுபறி நீடித்து வருகிறது.  சீட்டு பேரம் தொடர்பாக நேற்று முக்கிய தகவல் ஒன்று வெளியானது. இதன்படி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் ஆகியோர் 4 வாரங்களுக்கு முன்பு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், சீட்டு பேரம் தொடர்பாகவும் பேசப்பட்டது.

இதில் முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து பாஜகவும், நிதிஷ் குமாரும் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன்படி, பீகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகள் நிதிஷ் குமாருக்கு அளிக்கப்பட உள்ளது. அவரை தவிர்த்து ராம் விலாஸ் பாஸ்வான் கட்சிக்கு 4 சீட்டுகளும், உபேந்திர குஷ்வாஹா கட்சிக்கு 2 சீட்டுகளும் வழங்கப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில், மக்களவை பொதுத்தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதற்கு 16 சீட்டுகள் அளிக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும், பீகாரில் பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கு இணையான தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும் அம்மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், பாஜகவும், ஐக்கிய ஜனதா தள கட்சியும் சமமான இடங்களில் பீகாரில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி 7 இடங்களில் போட்டியிட்டு, 6 இடங்களில் வெற்றி பெற்றது. உபேந்திர குஷ்வாஹாவின் கட்சி போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனால், 7 தொகுதிகளில் இந்த முறையும் போட்டியிடுவோம் என்று லோக் ஜன சக்தி கட்சி கூறுகிறது. அதேபோல், உபேந்திர குஸ்வாஹா கட்சியும் 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கூறுவதால், சீட்டு பேரத்தில் இழுபறி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story