நீலகிரி: யானைகள் வழித்தடத்தில் உள்ள மின்வேலிகளை அகற்ற தமிழக மின்வாரியத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


நீலகிரி: யானைகள் வழித்தடத்தில் உள்ள மின்வேலிகளை அகற்ற தமிழக மின்வாரியத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Oct 2018 10:00 PM GMT (Updated: 2018-10-25T02:27:09+05:30)

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில், சீல் வைக்கப்பட்ட விடுதிகளை சுற்றியுள்ள மின்வேலிகளை அகற்றுமாறு தமிழக மின்வாரியத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் யானைகள் அதிகமாக வாழ்கின்றன. இங்கு ஊட்டி அருகேயுள்ள முதுமலை, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், மாயார் உள்ளிட்ட இடங்கள் முதுமலை புலிகள் காப்பகத்தின் வனப்பகுதிக்குள் வருகிறது. இந்த வனப்பகுதியில் யானைகள் உலவும் வழித்தடங்களில், தனியார் சிலர் அனுமதி பெறாமல் சுற்றுலா தங்கும் விடுதிகளை கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுலா விடுதிகளை சுற்றி குடியிருப்புகளும் உள்ளன.

இதனால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள், இந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் உலவுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்குமாறு அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இதற்கிடையே, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று, யானை ராஜேந்திரன் என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு, யானைகள் வழித்தடத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முழுமையாக அகற்ற உத்தரவிட்டார்.

அத்துடன், மழைக்காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் 18 ஆயிரம் யானைகள் இடம் பெயர்வதால் யானைகள் செல்லும் வழியில் புதிய கட்டுமானங்களை அனுமதிக்க கூடாது என்றும், யானைகள் வழித்தடங்களில் உள்ள சுமார் 49 சொகுசு விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கவும் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து, யானைகள் வழித்தடத்தில் இருந்த 49 விடுதிகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டன.

இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது யானை ராஜேந்திரன் தரப்பில் ஆஜரான வக்கீல், சீல் வைக்கப்பட்ட விடுதிகளை சுற்றி மின்வேலிகள் இருப்பதாகவும், அந்த மின்வேலிகள் காரணமாக யானைகள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, சீல் வைக்கப்பட்ட 49 விடுதிகளை சுற்றியுள்ள மின்வேலிகளை உடனே அகற்றுமாறு தமிழக மின்சார வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story