குஜராத் கலவரத்தில் தொடர்பா?, மோடி விடுவிப்புக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


குஜராத் கலவரத்தில் தொடர்பா?, மோடி விடுவிப்புக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Nov 2018 11:30 PM GMT (Updated: 19 Nov 2018 8:28 PM GMT)

குஜராத் கலவர வழக்கில் மோடி விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

கடந்த 2002-ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மிகப்பெரிய கலவரம் வெடித்தது. ஏராளமானோர் இந்த கலவரத்துக்கு பலியானார்கள். அவர்களில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இசான் ஜாப்ரி என்பவரும் ஒருவர் ஆவார்.

இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலானாய்வு குழு, அப்போதைய குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு கலவரத்தில் தொடர்பு ஏதும் இல்லை என்று அவர்களை விடுவித்தது. இதனை எதிர்த்து இசான் ஜாப்ரியின் மனைவி ஜக்கியா ஜாப்ரி குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு, ஜக்கியா ஜாப்ரியின் மனுவை கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஜக்கியா ஜாப்ரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை கடந்த 13-ந் தேதி விசாரணைக்கு வந்த போது 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில், நேற்று இந்த மனுவின் மீதான விசாரணை, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்று வாதிட்டார்.

மேலும், இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள சமூக சேவகி தீஸ்தா செதல்வாட் தாக்கல் செய்துள்ள மனு எந்த வகையிலும் முகாந்திரம் உடையது அல்ல என்பதால் அதை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு நீதிபதிகள், “இரு மனுக்களை விசாரிக்க மேலும் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது. எனவே வழக்கின் மீதான விசாரணை நவம்பர் 26-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.


Next Story