ஜம்மு காஷ்மீரில் 3-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல்: 75 சதவீத வாக்குப்பதிவு


ஜம்மு காஷ்மீரில் 3-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல்: 75 சதவீத வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 Nov 2018 5:01 PM GMT (Updated: 2018-11-24T22:31:17+05:30)

ஜம்மு காஷ்மீரில் 3-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் நவம்பர் 17-ம் தேதி தொடங்கியது. இந்த பஞ்சாயத்து தேர்தல் 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் 3-வது கட்டமாக பஞ்சாயத்து தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்றது.  பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

முன்னதாக கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது. இந்நிலையில் இன்று நடந்த மூன்றாவது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75.2 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

இன்று நடந்த தேர்தலில் ஜம்மு பகுதியில் அதிகபட்சமாக 83 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 55.7 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 75.2 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story