தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு மோசமான ரிசல்ட்! + "||" + Telangana election results BJP leading in 2 seats, gets poorer by 3 MLAs from 2014

தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு மோசமான ரிசல்ட்!

தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு மோசமான ரிசல்ட்!
தெலுங்கானாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று அமித்ஷா கூறிய நிலையில் அக்கட்சி கடந்த தேர்தலைவிட குறைந்த தொகுதிகளிலே முன்னிலைப் பெற்றுள்ளது.
ஐதராபாத்,  

2014 பாராளுமன்றத் தேர்தலை அடுத்து வெற்றிப்பாதை மட்டுமே தனக்கானது என்று சென்ற பா.ஜனதாவிற்கு பெரும் இடியாக 5 மாநில தேர்தல் அமைந்துள்ளது. சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சியை நோக்கி காங்கிரஸ் பயணிக்கிறது. பா.ஜனதா பின்தங்கியுள்ளது. பா.ஜனதாவின் கோட்டையான மத்திய பிரதேசத்திலும் சரியான போட்டி நிலவுகிறது. தெலுங்கானாவை பொறுத்தவரையில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியே ஆட்சியை பிடித்தது.

தென்னிந்தியாவில் கர்நாடகம் தவிர்த்து பிற மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அமைத்தது கிடையாது. சமீபத்திய கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. பிற மாநிலங்களவை விடவும் தெலுங்கானாவில் சாதகமான நிலையிருக்கும் என பா.ஜனதா நினைத்தது. இதற்கான பணிகளையும் மேற்கொண்டது. 2019 தேர்தலுடன் மாநிலத்தில் தேர்தல் நடைபெற வேண்டியது. ஆனால் ஆட்சியை கலைத்து முன் கூட்டியே தேர்தலை சந்திக்க முற்பட்டார் சந்திரசேகர ராவ்.  இருப்பினும் பா.ஜனதா தன்னுடைய வியூகத்தை துரிதப்படுத்தியது. 


வடமாநிலங்களை போன்று தீவிர கவனத்தை தெலுங்கானாவிலும் செலுத்தியது. உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் களமிறக்கியது. மத்திய அமைச்சர்களையும் தீவிர பிரசாரத்தில் இறக்கியது. 

ஆட்சியை பிடிப்போம்

கர்நாடக தேர்தலை அடுத்து  பாரதீய ஜனதாவின் அடுத்த டார்கெட்டாக தெலுங்கானா மாநிலம் அமைந்து உள்ளது என தகவல்கள் வெளியானது. 
 
தீவிரமாக பிரசாரம் செய்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா, “நாங்கள் தெலுங்கானாவில் ஆட்சியை அமைப்போம்,” என்று  மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். யோகி ஆதித்யநாத் போன்ற தலைவர்களும் இதனையே கூறினர். இருப்பினும் பா.ஜனதாவின் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் நினைத்த அளவு வரவில்லை எனவும் தெரியவந்தது.

மோசமான ரிசல்ட்

பா.ஜனதா ஆட்சியை பிடிப்போம் என்று கூறிய நிலையில் 2014 தேர்தலைவிடவும் மோசமான நிலையை சந்தித்துள்ளது.

தெலுங்கானாவில் மீண்டும் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியே ஆட்சியை அமைக்கிறது. பா.ஜனதாவின் இப்போதைய நிலை இரண்டு தொகுதியில் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 5 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா கொண்டிருந்தது. இப்போது மோசமான ரிசல்டையே சந்தித்துள்ளது.