ஆந்திராவில் ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது - ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் மூழ்கின


ஆந்திராவில் ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது - ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் மூழ்கின
x
தினத்தந்தி 17 Dec 2018 10:00 PM GMT (Updated: 2018-12-18T01:26:21+05:30)

‘பெய்ட்டி’ புயல் ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தன.

விஜயவாடா,

மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான ‘பெய்ட்டி’ புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள ஏனாம் தெற்கு பகுதியில் நேற்று மதியம் 1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டணம் ஆகிய மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது.

கிழக்கு, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா மற்றும் விசாகப்பட்டணம் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விளைந்திருந்த நெல், மஞ்சள், கேழ்வரகு, பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தன. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

விஜயவாடா அருகில் உள்ள கிரேஸ்துராஜ்புரம் என்ற இடத்தில் மலையில் இருந்து பெருமளவில் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் ரங்கல துர்காராவ் (வயது 28) என்பவர் மீது பாறைகள் விழுந்ததில் அந்த இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

காக்கிநாடா நகரம் உள்பட மின்கம்பங்கள் விழுந்த பல பகுதிகள் இருளில் மூழ்கின. பல பகுதிகளில் செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டது. விசாகப்பட்டணம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 47 ரெயில்களின் போக்குவரத்து தடைபட்டது. 6 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 23 பயணிகள் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

விசாகப்பட்டணம் விமான நிலையத்தில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 25 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்-மந்திரி புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புயல் பாதிப்பு குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


Next Story