கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணம் ரூ.2,700 கோடியை உடனே வழங்க வேண்டும் - நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்


கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணம் ரூ.2,700 கோடியை உடனே வழங்க வேண்டும் - நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Dec 2018 10:00 PM GMT (Updated: 19 Dec 2018 8:23 PM GMT)

கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2,700 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தமிழக அரசு நேற்று வலியுறுத்தியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்ற நிலைக்குழு (நிதி) கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு தேவையான பேரிடர் நிவாரண நிதி பற்றி விவாதிக்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழக பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. நிலைக் குழு தலைவர் வீரப்ப மொய்லி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிலைக்குழு உறுப்பினர்களான அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ணன், வெங்கடேஷ்பாபு, நவநீதகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலங்களவை எம்.பி. டி.கே.ரங்கராஜன் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளாக சில அ.தி.மு.க. எம்.பி.க்கள், தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அதிகாரிகள் தரப்பில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. பாதிப்பு விவரங்களை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். பின்னர் ரூ.2,700 கோடியாக உயர்த்தி கோரப்பட்ட இடைக்கால நிவாரண நிதிக்கு, தேவையான கூடுதல் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்பேரில் தமிழகத்துக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர், இது தொடர்பாக வருகிற 27-ந் தேதி விவாதிப்பது என்றும், அன்றைய கூட்டத்தில் நில அளவைத்துறை உள்ளிட்ட சில துறைகளின் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டதாக நிலைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.



Next Story