குடியரசு தலைவரின் பாதுகாவலர் பணிக்கு சாதி அடிப்படையில் நியமனம்; மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு


குடியரசு தலைவரின் பாதுகாவலர் பணிக்கு சாதி அடிப்படையில் நியமனம்; மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 26 Dec 2018 10:25 AM GMT (Updated: 2018-12-26T15:55:12+05:30)

குடியரசு தலைவரின் பாதுகாவலர் பணியில் சாதி அடிப்படையில் நியமனம் செய்வதற்கு எதிரான மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

அரியானாவை சேர்ந்த கவுரவ் யாதவ் என்பவரின் பொதுநல மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது.  இந்த மனுவில், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 4ந்தேதி நடந்த குடியரசு தலைவரின் பாதுகாவலர் நியமன பணிக்கான தேர்வுக்கு ஜாட், ராஜ்புத் மற்றும் ஜாட் சீக்கியர் ஆகிய 3 சாதியினரே அழைக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் இந்த நியமனத்தினை ஒத்தி வைக்க வேண்டும் என கவுரவ் குறிப்பிட்டு உள்ளார்.  இதுபற்றி நீதிபதிகள் எஸ். முரளிதர் மற்றும் சஞ்சீவ் நாருலா ஆகியோர் கொண்ட அமர்வானது, மத்திய ராணுவ அமைச்சகம், ராணுவ உயரதிகாரி, குடியரசு தலைவரின் பாதுகாவல் தளபதி மற்றும் ராணுவ பணிநியமன இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுபற்றி 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அவர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.  இதுபற்றி வேறு எவரும் கூடுதலாக மனு செய்ய விரும்பினால் அடுத்த விசாரணைக்கு முன் அவர்கள் கோரிக்கை வைக்கலாம்.  அடுத்த வருடம் மே 8ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கு முன் இதுபோன்ற மனுவை எடுத்து கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருந்தது.

Next Story