புதிய முழுநேர சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய உயர்மட்ட தேர்வு குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் - பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்


புதிய முழுநேர சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய உயர்மட்ட தேர்வு குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் - பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்
x
தினத்தந்தி 15 Jan 2019 11:00 PM GMT (Updated: 2019-01-16T03:41:04+05:30)

புதிய முழுநேர சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய உயர்மட்ட தேர்வு குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி,

புதிய முழுநேர சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய உயர்மட்ட தேர்வு குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால்  மத்திய அரசு அவர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதனை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  

சிபிஐ இயக்குனராக அலோக் வர்மாவை மீண்டும் நியமனம் செய்த உச்சநீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இறுதி முடிவு எடுக்க பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு உத்தரவிட்டது.

இந்த குழுவில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். கடந்த 10-ம் தேதி அலோக் வர்மா குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த இந்த உயர்மட்டக் குழு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில், சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்கியது. இதனை தொடர்ந்து சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்த அலோக் வர்மா, தீயணைப்பு துறை இயக்குநராக மாற்றப்பட்டார். இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். தனது பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா செய்தார்.

அலோக் வர்மாவை நீக்க பிரதமர் மோடியும், நீதிபதி சிக்ரியும் ஆதரவு தெரிவிக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்நிலையில், மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “சுதந்திரமான தலைவரின் கீழ் சிபிஐ இயங்குவதை கண்டு பயப்படுவது போல், அரசின் செயல்பாடுகள் உள்ளன. இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம். புதிய தலைவரை நியமிக்க, உயர்மட்ட குழு கூட்டத்தை உடனடியாக பிரதமர் கூட்ட வேண்டும். ஜனவரி 10-ம் தேதி உயர்மட்டக் குழுவில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் மற்றும் நீதிபதி ஏகே.பட்நாயக் அறிக்கையின் விவரத்தையும், உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் நடந்ததையும் மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் முடிவுக்கு வரும்” என்று அவர் கூறியுள்ளார்.


Next Story