சுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை வழக்கு 22-ந் தேதி விசாரணைக்கு வராது


சுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை வழக்கு 22-ந் தேதி விசாரணைக்கு வராது
x
தினத்தந்தி 16 Jan 2019 6:46 PM GMT (Updated: 2019-01-17T00:16:34+05:30)

சுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை வழக்கு 22-ந் தேதி விசாரணைக்கு வர வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, எல்.நாகேஸ்வரராவ், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வருகிற 22-ந் தேதி விசாரணைக்கு வருவதாக இருந்தது.

இந்த நிலையில், மனுதாரரின் சார்பில் வக்கீல் மேத்யூஸ் ஜே.நெடும்பரா நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி, அய்யப்ப பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மறுஆய்வு மனு மீதான விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள், அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான இந்து மல்கோத்ரா மருத்துவ விடுப்பில் இருப்பதால், மறுஆய்வு மனு மீது 22-ந் தேதி விசாரணை நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறினார்கள்.


Next Story