மம்தா தலைமையில் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெறுகிறது: திமுக உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு


மம்தா தலைமையில்  பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெறுகிறது: திமுக உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Jan 2019 3:30 AM GMT (Updated: 19 Jan 2019 3:42 AM GMT)

மம்தா தலைமையில் பிரம்மாண்ட மாநாடு கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

கொல்கத்தா,

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெறு கிறது.  மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு முயற்சியாக மேற்கு வங்க முதல் மந்திரியும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு அனுப்பியுள்ளார். 

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட்  மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் உட்பட சுமார் 25 அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்பார்பகள் தெரிகிறது.  முன்னதாக, இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த கட்சித்தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்து நேற்று பேசினார். 



காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. எனினும், இந்த மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் சார்பாக மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. கர்நாடக முதல் மந்திரி எச்.டி குமாரசாமி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல் மந்திரி என்.சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகிய தலைவர்களும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். 

பிரம்மாண்ட பொதுக்கூட்ட மாநாடு நடைபெறும் பிரிகேட் பரேட் மைதானத்தில்  7 லட்சம் பேர் கூடலாம் என போலீஸார்  தெரிவித்துள்ளனர். ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டத்திற்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் மாநாடாக இந்த கூட்டம் அமையும் எனவும் அக்கட்சியினர் கூறியுள்ளனர். ”ஒற்றுமை இந்தியா மாநாடு” என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டம் பாஜகவுக்கு எதிராக அனைத்துக்கட்சிகளையும் ஒரணியில் திரளவைக்கும் முயற்சியாக நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலையில் இருந்து பொதுமக்கள் வருகை தர துவங்கியுள்ளனர். 

Next Story