ராமர் கோவில் கட்டும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை: அகதா பரிஷத் அமைப்பு குற்றச்சாட்டு


ராமர் கோவில் கட்டும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை: அகதா பரிஷத் அமைப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Jan 2019 2:11 AM GMT (Updated: 21 Jan 2019 2:11 AM GMT)

ராமர் கோவில் கட்டும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்று அகதா பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரக்யாராஜ்,

கும்பமேளா முடிந்த உடன் இங்கு கூடியுள்ள அனைத்து மடாதிபதிகளும் ராமர் கோவில் கட்டும் பணிகளை துவங்குவார்கள் என்று அகதா பரிஷத் அமைப்பு தலைவர் நரேந்திர கிரி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:- பிரக்யாராஜ்ஜில் கூடியுள்ள அனைத்து  சாமியார்களும் கும்பமேளா முடிந்த உடன் அயோத்தியில்  கூடுவார்கள். அப்போது ராமர் கோவில் கட்டும் பணி துவங்கும். ராமர் கோவில் கட்ட பாஜக ஆர்வம் காட்ட வில்லை. ராமர் கோவில் விவகாரத்தை தேர்தல் வரை  உயிர்ப்புடன் வைத்திருக்க பாஜக விரும்புகிறது” என்றார். 


உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகர் என்ற பெயரால் தற்போது அழைக்கப்படுகிற அலகாபாத்தில், கடந்த 15-ந் தேதி கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் மட்டும் 1 கோடியே 40 லட்சம் பேர் அங்கு குவிந்து, புனித நீராடினர். ஒவ்வொரு நாளிலும் லட்சக்கணக்கானோர் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். இந்த கும்பமேளாவுக்காக உத்தரபிரதேச மாநிலத்தை ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசு ரூ.4 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கும்பமேளா நடைபெறும் இடத்தின் பரப்பளவு முன்பு 1,600 ஹெக்டேராக இருந்தது. தற்போது அது இரு மடங்காக (3 ஆயிரத்து 200 ஹெக்டேர்) அதிகரிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவுக்கு குவிகிற கோடிக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 4 ஆயிரம் கூடாரங்களுடன் ஒரு சிறிய நகரமே உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய சாலைகள், பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கும்பமேளாவின்போது மொத்தம் 12 கோடி மக்கள் வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் 4-ந் தேதிதான் கும்பமேளா நிறைவு பெறுகிறது.

Next Story