பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி


பிரியங்காவிற்கு பொறுப்பு; பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் விரோதம் கிடையாது - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 23 Jan 2019 9:40 AM GMT (Updated: 2019-01-23T15:10:16+05:30)

பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளுடன் விரோதம் கிடையாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ரேபரேலி,

80 தொகுதிகளை கொண்ட உ.பி.யில், வேண்டுமென்றால் அமேதி மற்றும் ரேபரேலியில் போட்டியிடுங்கள் என்று கூறி காங்கிரசை, சமாஜ்வாடி-பகுஜன்சமாஜ் கட்சிகள் கூட்டணியிலிருந்து கழற்றிவிட்ட நிலையில் பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு எதுவும் கிடையாது என இரு கட்சிகளும் கூறிவிட்டன. இதனையடுத்து காங்கிரஸ் தனியாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை காங்கிரஸ்  அறிவித்து உள்ளது. 

இதுவரையில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் மட்டுமே பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். இப்போது  உத்தர பிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக இந்நியமனம் அமைந்துள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தலில் எனக்கு பிரியங்கா காந்தி உதவி செய்யப்போகிறார் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அவரால் சிறப்பாக செயல்பட முடியும். ஜோதிராதித்யா சிந்தியா (உத்தரபிரதேச மாநில மேற்கு பிராந்திய பொதுச்செயலாளர்) மிகவும் சிறப்பான இளம் தலைவராவார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக உத்தரபிரதேசத்தில் கூட்டணியை அமைத்துள்ளது. எனக்கு அவர்களுக்கு எதிராக எந்தஒரு விரோதமும் கிடையாது. காங்கிரசின் கொள்கையை முன்னெடுத்து செல்வது என்னுடைய பொறுப்பாகும்” என கூறியுள்ளார். பா.ஜனதா கோட்டையாக விளங்கிய மத்திய பிரதேசத்தில் கடும் போட்டிக்கு இடையே காங்கிரசுக்கு வெற்றிக்கனியை பறித்து கொடுத்ததில் முக்கிய பங்காற்றியவர் ஜோதிராதித்யா சிந்தியா ஆவார். 

Next Story